மலேசியா, ஆசியான் தலைவர் நாட்டாக, மையப்பாட்டை வலியுறுத்தும் நோக்கத்தில் ஆசியான்-அமெரிக்கா உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்யும் வகையில் அமெரிக்கத் தலைவர் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் லங்காவியில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட ஒருமனப்பாட்டைத் தொடர்ந்து இக்கடிதம் எழுதப்பட்டதாகத் தெரிவித்தார்.
“இதைத் தொடர்ந்து, டிரம்பிற்கு கடிதம் எழுதி, ஆசியான்-அமெரிக்கா மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டுகோள் வைத்தேன். இது நமது அபிலாஷைகளை மட்டும் அல்ல, நமது பொறுப்புகளையும் பிரதிபலிக்கிறது,” என்று 46ஆவது ஆசியான் உச்சி மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசானும், அமெரிக்காவிடமிருந்து ஆசியான்-அமெரிக்கா சிறப்பு உச்சி மாநாட்டிற்கான தேதி குறித்து உறுதிப்படுத்தும் பதிலை எதிர்நோக்குவதாக நேற்று தெரிவித்தார்.