டெல் அவிவ்,இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது.
20 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், காசா பகுதியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கியது. இஸ்ரேலும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தாக்குதல் நடத்தி கொன்றது.
இதேபோன்று, ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவரையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது. தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் மோதலை நிறுத்தி கொண்டன. லெபனான் மீது நடத்திய தாக்குதலையும் இஸ்ரேல் நிறுத்தி கொண்டது.
இந்த நிலையில், சிரியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை லெபனான் நாட்டு பகுதியில் இருந்து இயக்கும் பணியில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் ஒருவர் ஹொசம் காசிம் கோரப். இவர் கோலன் ஹைட்ஸ் பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் (ஐ.டி.எப்.) லெபனானின் பெகா பள்ளத்தாக்கு பகுதியில் நேற்றிரவு தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் காசிம் கோரப் கொல்லப்பட்டு உள்ளார். இவர் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியாகவும் செயல்பட்டு வந்துள்ளார். அவருடைய உயிரிழப்பை, ஐ.டி.எப். இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் உறுதி செய்து உள்ளது.