ஜாசின்,
கடந்த மாதம் ஒரு பாலர் பள்ளியின் முன்புள்ள கார் பார்க்கில் நடந்த கொலை சம்பவத்தில், வேலையற்ற ஒரு ஆடவரை கொன்றதற்காக மூன்று ஆண்கள் மீது இன்று ஜாசின் மகிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
இதில், சூப்பர் மார்க்கெட் ஊழியர் எம். யோகேஸ்வரன் (25), மெக்கானிக் மொக்த் அஸ்மி மொக்த் நோர் (34) மற்றும் லோரி ஓட்டுநர் கே. கிருஷ்ணமூர்த்தி (66) ஆகியோர், குற்றச்சாட்டு மலாய் மற்றும் தமிழ் மொழிகளில் தனித்தனியாக வாசிக்கப்படுகையில், அவர்கள் தலைஅசைத்துக் கொண்டனர்.
ஆனால், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருப்பதால், அவர்களிடம் எந்தவொரு வாக்குமூலமும் பெறப்படவில்லை.
இந்த மூவரும், கடந்த ஜூலை 27ஆம் தேதி மாலை 7.37 மணி முதல் 8.59 மணி நேரத்திற்குள் பண்டார் ஜாசின் பெஸ்தாரி பகுதியில் உள்ள ஒரு கிண்டர்கார்டன் பள்ளியின் முன்புள்ள கார்பார்க்கில் க. குணாளான் (52) என்பவரை கொன்றதாக, கூட்டு குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இக்குற்றுச்சாட்டுகள் Penal Code பிரிவு 302 மற்றும் பிரிவு 34-ன் கீழ் தாக்கப்பட்டுள்ளன. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படக்கூடியது.
மூன்று பிரதிவாதிகளுக்கும் தனித்தனியாக அம்ரித் பால்சிங், டத்தோ கே. சசி குமார் மற்றும் ஏ. மாதன் ஆகிய வழக்கறிஞர்கள் முன்னிலை வகித்தனர். அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப்படவில்லை.
வழக்கின் மேலதிக விசாரணைக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.