கோப்ரி,ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மற்றும் அல்-கொய்தா அமைப்புகளால் வன்முறை பரவி மக்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்கள் மக்களிடையே வன்முறையை பரப்புவதுடன், வெளிநாட்டு தொழிலாளர்களை கடத்துவதும், மிரட்டி பணம் பறிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில், 5 இந்தியர்களை ஆயுதம் ஏந்திய குழு ஒன்று கடத்தி சென்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேற்கு மாலியின் கோப்ரி பகுதியருகே தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இந்திய தொழிலாளர்கள் 5 பேரை அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினர் கடத்தி சென்றுள்ளனர்.
அவர்கள் எந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். என்ன ஆனார்கள் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் முன்னெச்சரிக்கையாக, அந்த நிறுவனத்தில் இருந்த இந்திய தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக பமாகோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.