போதைப்பொருள் குற்றச்சாட்டில் அக்டோபர் 8ஆம் தேதி சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட மலேசியர் பன்னீர்செல்வம் பரந்தாமன் தொடர்பாக பொய்யான தகவல் வெளியிட்டதற்காக, மலேசியச் செய்தித்தளம் MalaysiaNow மீது POFMA (Protection from Online Falsehoods and Manipulation Act) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பொஃப்மா உத்தரவு, MalaysiaNow கடந்த நவம்பர் 9ஆம் தேதி வெளியிட்ட செய்தி தொடர்பாக சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் வழங்கிய உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், MalaysiaNow தளம் தனது இணையப்பக்கம், ஃபேஸ்புக், எக்ஸ், லிங்க்ட்இன் பதிவுகளில் வெளியிட்ட செய்திக்குப் பக்கத்தில் திருத்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.
உள்துறை அமைச்சு தெரிவித்ததாவது,
பன்னீரின் மரண தண்டனை சட்ட விதிமுறைகளை புறக்கணித்து நிறைவேற்றப்பட்டதாக MalaysiaNow வெளியிட்ட தகவல் உண்மையல்ல.
மரண தண்டனை எதிர்நோக்கும் கைதிகளுக்கு அனைத்து சட்ட வாய்ப்புகளும் வழங்கப்பட்ட பின்னரே தண்டனை நிறைவேற்றப்படும்; இது பன்னீருக்கும் ஏற்றதாகும் என்று அமைச்சு வலியுறுத்தியது.
MalaysiaNow தனது செய்தியில், பன்னீருக்கு மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) குறிப்பிடத்தக்க உதவி செய்ததற்கான சான்றிதழை சிங்கப்பூர் அரசு வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், பன்னீர் அதிகாரிகளுக்கு கணிசமான உதவி வழங்கவில்லை என்று அரசாங்க வழக்கறிஞர் விளக்கமளித்தார்.
மேலும் MalaysiaNow செய்தியில்,
பன்னீருக்கும் மலேசிய போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறைக்கும் இடையிலான ரகசிய சந்திப்பை சிங்கப்பூர் CNB ஏற்பாடு செய்ததாகவும்,
அப்போது CNB அதிகாரி ஒருவர் மலேசியப் போலீஸ் சீருடை அணிந்திருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்த தகவலும் தவறானது என உள்துறை அமைச்சு மறுத்தது. அந்த சந்திப்பு 27 செப்டம்பர் நடைபெற்றது, அப்போது CNB அதிகாரி சிங்கப்பூர் சீருடை அணிந்திருந்ததாகவும் அமைச்சு தெரிவித்தது.
பன்னீரின் உடைமைகள் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதைச் சிங்கப்பூர் சிறைத்துறை மறைத்ததாக MalaysiaNow கூறியிருந்தது. இதையும் உள்துறை அமைச்சு மறுத்து, பாதுகாப்பு காரணங்களால் சில ஆவணப் பக்கங்கள் மட்டும் நீக்கப்பட்டதாகவும், மீதமுள்ள அனைத்து பொருட்களும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் விளக்கியது.
சிறைத்துறையின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட பன்னீரின் குடும்பத்தார், எந்த படிவத்திலும் கையெழுத்திடாமல் உடைமைகளைப் பெற்றுச் சென்றதாகவும் அமைச்சு தெரிவித்தது.