சென்னை:
சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு சம்பவங்களில், மொத்தம் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 13) தாய்லாந்திலிருந்து சென்னை வந்த இரண்டு பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகள் அவர்களின் பயணப் பெட்டிகளைச் சோதனை செய்தனர். அப்போது, 28 கிலோ உயர்ந்த வகை செயற்கை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு 10 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் துபாயில் பணிப்பெண்ணாகப் பணியாற்றியவர் என்றும், தமிழ்த் திரைப்படங்களில் இடைக்கிடையாக சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள், தாய்லாந்து போதைப்பொருள் கும்பலிடமிருந்து இந்த கஞ்சாவை பெற்று புக்கெட் விமான நிலையத்தில் இருந்து கடத்தி வந்ததாகவும், சில தமிழ் திரைப்பட பிரபலங்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டிருந்ததாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து, சனிக்கிழமை (நவம்பர் 15) மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்தனர்.
அப்போது, சென்னையைச் சேர்ந்த 30 வயது இளைஞரின் பயணப் பெட்டியில் 3 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது. இளைஞர் கைது செய்யப்பட்டு காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்டார்.