பாட்னா,பீகார் சட்ட சபை தேர்தலில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மாபெரும் பலத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த கூட்டணியில் அங்கம் வகித்த பா. ஜனதா 89, ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதையடுத்து பீகார் முதல் மந்திரியாக மீண்டும் நிதீஷ் குமார் பதவியேற்கிறார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வரும் 20 ஆம் தேதி 10-வது முறையாக முதல் மந்திரியாக நிதீஷ் குமார் பதவியேற்க உள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் பீகார் முதல் மந்திரி பதவியை நிதீஷ் குமார் இன்று ராஜினாமா செய்தார். கவர்னர் ஆரிப் முகமது கானைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி, சட்டசபயைக் கலைக்க பரிந்துரைத்துள்ளார். இதன்படி, 19 ஆம் தேதி சட்ட சபை கலைக்கப்பட்டு, நவம்பர் 20 ஆம் தேதி முதல் மந்திரியாக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.