கோலாலம்பூர்,.
ஆசியானுக்கு மலேசியா தலைமை பொறுப்பேற்ற காலத்தில் காட்டிய தூதரக அணுகுமுறை, ஆசியானின் சர்வதேச தாக்கத்தை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்தியதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட உயர்நிலை கூட்டங்கள் மற்றும் விஸ்மா புத்ராவின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இவ்வாண்டு ஆசியானுக்கு எதிர்பாராத அளவு வெற்றியைத் தந்ததாக அவர்கள் கூறினர்.
பல சவால்கள் இருந்தபோதிலும், மலேசியா ஆசியானின் தலைமைத்துவத்தை சிறப்பாக முன்னெடுத்தது. ஆசியானின் முக்கியத்துவத்தை உயர்த்த வேண்டும் என்ற அன்வாரின் நோக்கம் சர்வதேச சமூகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதாக அகாடமி நுசாந்தாராவின் அஸ்மி ஹசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தலைமை பொறுப்பேற்ற காலத்தில் மலேசியா 300-க்கும் மேற்பட்ட முக்கிய கூட்டங்களை ஒருங்கிணைத்ததுடன், தாய்லாந்து–கம்போடியா இடையிலான ஆரம்ப நிலை சமாதான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்தது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பெரும் சக்திகள் ஆசியானின் மீது மேலும் கவனம் செலுத்தியதாகவும், எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பங்கேற்றதும் முக்கிய முன்னேற்றமாகவும் மதிக்கப்படுகிறது.
வெளிநாட்டு அமைச்சர் முகமது ஹசன் மற்றும் விஸ்மா புத்ராவின் தூதரக அணியின் பங்களிப்பை சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பார்கிம் பெங் பாராட்டினார். 330-க்கும் மேற்பட்ட மாநாடுகள் மற்றும் அதிகாரிகள் கூட்டங்களை தவறில்லாமல் நிர்வகித்தது மலேசியாவின் திறனைக் காட்டியதாக அவர் கூறினார்.
எனவே மலேசியாவின் அணுகுமுறைகளை கவனமாக எல்லா நாடுகளும் பார்த்துக்கொண்டன. எனவே பிலிப்பைன்ஸ் அடுத்த தலைமை பொறுப்பேற்கும் நிலையில் மலேசியாவின் அனுபவத்தை பயன்படுத்த வேண்டும் என்று அஸ்மி ஹசன் பரிந்துரைத்தார். மேலும், மலேசியாவின் உயர்ந்த சர்வதேச மதிப்பு மற்றும் Visit Malaysia 2026 காரணமாக நாட்டிற்கான சுற்றுலா மற்றும் பொருளாதார பலன்கள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் நிபுணர்களிடையே நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.