Offline
Menu
2.5 லட்சம் உயர் ஊதிய வேலைவாய்ப்பு இலக்கு; ‘MYFutureJobs’ வழி கைகொடுக்கும் மனிதவள அமைச்சு!
By Administrator
Published on 07/05/2026 18:00
News

மலேசியாவில் உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்பும் சந்தை தேவையை பூர்த்தி செய்வதுடன், தகுதிக்கேற்ற உயர் ஊதியத்தையும் வழங்குவதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

வெறுமனே எண்ணிக்கையின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை விட, வேலை தேடுபவர்களின் திறனுக்கேற்ற தரமான வேலைகளை வழங்குவதிலேயே தற்போது அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.

இன்று பாசிர் கூடாங்கிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில்: “வேலை தேடுபவர்களுக்குப் பொருத்தமில்லாத, முறையான ஊதியம் இல்லாத வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் எந்தப் பயனும் இல்லை. இதற்காகத்தான் எங்களிடம் ‘மைபியூச்சர்ஜாப்ஸ்’ (MYFutureJobs) தளம் உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் இத்தளத்தில், இதுவரை 3,000,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. அதில் 200,000 பேருக்குப் பொருத்தமான வேலைகள் கிடைத்துள்ள வேளையில், இன்னும் 100,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளன” என்றார்.

நேற்று, பக்காத்தான் ஹரப்பான் (PH) கூட்டணி, “அனைவருக்குமான ஜோகூர்” (Johor for All) என்ற கருப்பொருளில் 10 முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய தனது தேர்தல் அறிக்கையை (Manifesto) வெளியிட்டது.

அதில், ஜோகூரில் நவீன மற்றும் உயர் மதிப்புமிக்க தொழில்துறைகளை மேம்படுத்துவதன் மூலம் 250,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், ஜோகூர் மக்களின் சராசரி வருமானத்தை (Median Wage) குறைந்தது 30 விழுக்காடு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் மொத்தம் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஜூலை 7-ஆம் தேதி முன்கூட்டியே வாக்குப்பதிவும் (Early Voting), ஜூலை 11-ஆம் தேதி பொது வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Comments