செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதகுலத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தாமல், பாதுகாப்பாகவும் நியாயமாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான ஐநா சபையின் முக்கிய உலகளாவிய மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் சர்வதேச அறிவியல் குழுக்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதர்கள் பங்கேற்று, AI தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி குறித்து தங்களின் கடுமையான எச்சரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அறிவியல் குழுவின் முக்கிய உறுப்பினரான யோஷுவா பெஞ்சியோ (Yoshua Bengio) கூறுகையில், AI தொழில்நுட்பத்தின் ஏமாற்றக்கூடிய மற்றும் கணிக்க முடியாத நடத்தைக்கான சான்றுகள் அதிகரித்து வருவதாகவும், அது தவறான மனிதர்களின் கைகளுக்குச் சென்றால் அல்லது தானாகவே கூட "பேரழிவு தீங்குகளை" (Catastrophic harm) ஏற்படுத்தக்கூடும் என்றும் தற்போதைய அறிவியலால் அதற்கு முழு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், சமூக ஊடகங்களில் AI மூலம் பொய்களும், வெறுப்புணர்வும் மிக வேகமாகப் பரப்பப்படுவதால் "தகவல் நேர்மை" (Information Integrity) முற்றிலும் பாதிக்கப்பட்டு, உண்மை எது பொய் எது என்று பிரித்தறிய முடியாத சூழல் உலக ஜனநாயகக் கட்டமைப்பிற்கே பெரும் சவாலாக மாறியுள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து நாடுகளும் இணைந்து உடனடியாக உலகளாவிய பாதுகாப்பு விதிகளை (Global Guardrails) உருவாக்க வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.