Offline
Menu
குடும்பச் சண்டையில் தாயின் வீட்டிற்குத் தீ வைத்த மகன் கைது; 80% வீடு எரிந்து சாம்பல்!
By Administrator
Published on 07/14/2026 10:00
News

கெடா, ஜித்ராவில் உள்ள கம்போங் சுங்கை பாருவில் (Kampung Sungai Baru) ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தனது சொந்தத் தாயின் வீட்டிற்குத் தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மதியம் சுமார் 3.15 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் குபாங் பாசு மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் முகமட் ராட்ஸி அப்துல் ரஹீம் தெரிவித்தார். அந்த வீட்டின் வெளியே வியாபாரம் செய்து கொண்டிருந்த 28 வயதுடைய சந்தேக நபரின் உறவினர், சந்தேக நபர் வீட்டிற்குள் செல்வதைக் கண்டுள்ளார்.

ந்தேக நபர் வீட்டிற்குள் சென்று 30 நிமிடங்களுக்குப் பிறகு வெளியேறியுள்ளார். அவர் சென்ற உடனே வீட்டின் வரவேற்பறையிலிருந்து கரும்புகை எழும்புவதையும், ஜன்னல் வழியாகத் தீ மளமளவெனப் பரவுவதையும் கண்ட அந்த உறவினர் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இந்தத் தீ விபத்தில் அந்த இரண்டு அடுக்கு வீடு (Two-storey house) சுமார் 80 விழுக்காடு எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்ட வீடு போக்கோக் செனாவில் வசிக்கும் சந்தேக நபரின் 60 வயது தாய்க்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு ஏற்கனவே 5 பழைய குற்றப் பதிவுகள் உள்ளன. அதில் கொலை மிரட்டல் (பிரிவு 506), காயப்படுத்துதல் (பிரிவு 324), போதைப்பொருள் வழக்கு மற்றும் சட்டவிரோத சூதாட்டம் ஆகியவை அடங்கும்.

குடும்பத்தினருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகே இந்தத் தீவைப்புச் சம்பவத்தை அவர் நிகழ்த்தியுள்ளார் என நம்பப்படுகிறது. தற்போது அவர் மீது தீ அல்லது வெடிபொருட்களைக் கொண்டு வீட்டிற்குச் சேதம் விளைவித்த குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டம் பிரிவு 436-இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Comments