மலேசியாவின் முன்னாள் முதல் பெண்மணி துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா காலமானார்!
கோலாலம்பூர்:
மலேசியாவின் முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் மனைவியும், நாட்டின் முன்னாள் முதல் பெண்மணியுமான துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா முகமட் அலி இன்று கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய மையத்தில் (IJN) காலமானார். மறைந்த போது அவருக்கு வயது 100.
இத்துயரச் செய்தியை அவரது மகன் டான்ஸ்ரீ மொக்சானி மகாதீர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
“நாட்டின் தலைசிறந்த மருத்துவச் சேவையாளராகவும், சமூக நல ஆர்வலராகவும் விளங்கிய துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா, கடந்த ஜூலை 12-ஆம் தேதி தான் தனது 100-ஆவது பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடியிருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் முதல் பெண் மருத்துவ அதிகாரிகளில் ஒருவரான துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா, நாட்டின் கிராமப்புறச் சுகாதார மேம்பாட்டிலும், தாய்-சேய் நலத் திட்டங்களிலும் மகத்தான பங்காற்றியவர். புற்றுநோயை வென்ற சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்த அவர், சர்வதேச அளவில் மகளிர் மேம்பாடு மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவராக இருந்து உலகளாவிய முத்திரையைப் பதித்துள்ளார்.
அவரது மறைவுச் செய்தி கேட்டதும், பிரதமர், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மலேசியர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.