நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நிலாய் சட்டமன்றத் தொகுதியில் (N10) போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜெ. அருள் குமாருக்கு ஆதரவு கோரி நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில், டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தமது உரையில், அருள் குமார் புதிய முகம் அல்ல என்றும், பல ஆண்டுகளாக நிலாய் மக்களுக்கு சேவையாற்றி வரும் அனுபவமிக்க மக்கள் பிரதிநிதி என்றும் கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் மக்களின் பெரும் வருகை, அருள் குமாருக்கு கிடைத்துள்ள வலுவான மக்கள் ஆதரவின் வெளிப்பாடாகும் என்றார்.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வர வேண்டும் என்றும், ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். வலுவான மக்கள் ஆணையுடன் அருள் குமாரை மீண்டும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
நெகிரி செம்பிலான் தற்போது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வரும் மாநிலமாக உருவெடுத்து வருவதாகக் கூறிய அவர், உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் திறன் மாநிலத்திற்கு இருப்பதாக தெரிவித்தார். உயர்கல்வி நிறுவனங்கள், தொழில்துறை வளர்ச்சி, புதிய முதலீடுகள் ஆகியவை மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமையும் என்றார்.