Offline
Menu
போர்ட்டிக்சனில் சோகம்: டேங்கர் லோரி சக்கரத்தில் சிக்கிய பெண் சைக்கிள் ஓட்டி படுகாயம்!
By Administrator
Published on 07/27/2026 19:00
News

போர்ட்டிக்சன் – சிரம்பான் சாலையில், டேங்கர் லோரி மோதிய விபத்தில் மிதிவண்டி ஓட்டிச் சென்ற 34 வயது உள்ளூர் பெண்மணியின் இடது கால் லோரி சக்கரத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தார்.

இன்று நண்பகல் வேளையில், ஜாலான் சிரம்பான் – போர்ட்டிக்சன் 4.5 கிலோமீட்டர் வழியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்மணி போர்ட்டிக்சனிலிருந்து லுக்குட் நோக்கித் தனது மிதிவண்டியில் சென்று கொண்டு இருந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் சாலையின் இடது ஓரத்திலிருந்து நடுவரிசைக்கு மாற முயன்றதாக நம்பப்படுகிறது என்று, போர்ட்டிக்சன் மாவட்டப் போலீஸ் தலைவர் சுப்ரண்டண்ட் மஸ்லான் உடின் கூறினார்.

அப்போது அந்த வழியே வந்த 55 வயது நபரின் டேங்கர் லோரியால் உடனடியாக வண்டியைக் கட்டுப்படுத்த முடியாமல், மிதிவண்டியின் வலது பக்கத்தில் உரசி மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அப்பெண்ணின் இடது காலின் மீது டேங்கர் லோரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த அப்பெண் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகப் போர்ட்டிக்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Comments