தம்பின்: கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தை நடத்துவதற்காக, ஃபார்முலா 1 அமைப்புக்கு பல மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான புரவலர் கட்டணத்தை மலேசியா செலுத்த வேண்டியதில்லை என பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மோட்டார்ஸ்போர்ட் நிகழ்வுத் தரங்களுக்கு ஏற்ப சிப்பாங் அனைத்துலக பந்தயத் திடலை (SIC) பராமரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் 16 மில்லியன் ரிங்கிட்டை மட்டும் அரசாங்கம் செலவழித்தால் போதும் என்று அன்வார் கூறினார்.
இது இலவசம். ஏதேனும் செலவு ஏற்பட்டால், அது பந்தயத் திடலில் சில மேம்பாடுகளைச் செய்வதற்கு மட்டுமே இருக்கும்,” என்று அவர் இன்று கெமாஸில் உள்ள சையத் சிராஜுதீன் ராணுவ முகாமில் கூறினார். ஃபார்முலா 1 பந்தயங்களை நடத்துவதற்காக மலேசியா இதற்கு முன்பு நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் செலவழித்துள்ளது என்றும் அவர் கூறினார். இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல் மற்றும் உலக மோட்டார் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஒப்புதல்களுக்கு உட்பட்டு, அக்டோபர் 2 முதல் 4 வரை பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தை மலேசியா நடத்தும் என்று ஃபார்முலா 1 அமைப்பு நேற்று உறுதிப்படுத்தியது.
SIC 1999 முதல் 2017 வரை மலேசிய கிராண்ட் பிரிக்ஸை நடத்தியது, ஆனால் அதிகரித்து வரும் நடத்துகின்ற செலவுகள் மற்றும் உரிமக் கட்டணங்கள் காரணமாக அது பின்னர் பந்தயப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. ஏப்ரல் 2023இல், அப்போதைய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ, அதனால் ஏற்படும் அதிக செலவுகள் காரணமாக, மலேசியா மீண்டும் செபாங்கில் F1 பந்தயங்களை நடத்துவது “முற்றிலும் சாத்தியமற்றது” என்று கூறினார். மலேசிய கிராண்ட் பிரிக்ஸை மீண்டும் நடத்துவதற்கு, நடத்துகின்ற மற்றும் அனுமதி வழங்கும் கட்டணங்களுக்காக ஆண்டுக்கு சுமார் RM300 மில்லியன் செலவாகும் என்று முன்னர் மதிப்பிடப்பட்டது.