சுமார் 118.87 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு சகோதரர்கள் மற்றும் அவர்களின் நண்பர் ஒருவர் மீது ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
முகமட் அஃபாண்டி சுல்கஃப்லி (41), அவரது சகோதரர்களான ஷாருல் அஸ்வான் (38), முகமட் கைருல் அஸ்மில் (40), முகமட் அமீருல் (29), முகமட் ஹஃபிஸி (27), முகமட் ஷா ஹெர்மான் (35) ஆகிய ஆறு பேருடன், அவர்களின் நண்பரான முகமட் இஸ்மாயில் போர்ஹான் (43) என்பவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி இரவு 9:20 மணியளவில், ஈப்போ, செமோரில் உள்ள ‘கம்போங் சே சைனல்’ கிராமத்தின் முகவரியற்ற தற்காலிகக் குடில் ஒன்றில் இவர்கள் அனைவரும் இணைந்து ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் எழுவர் மீதும் 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வழக்கு மாஜிஸ்திரேட் நோரிசான் ரிதுவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால், எதிராளிகளிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் இரசாயனப் பரிசோதனை அறிக்கைகளுக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.