Offline
Menu
இந்தாண்டு ஜனவரி 1 முதல் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு 1,328 சம்மன்கள் விதிப்பு
By Administrator
Published on 07/31/2026 17:00
News

178 வாகனங்கள் பறிமுதல் -பினாங்கு JPJ !

இந்த ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மேற்கொண்டு வரும் ‘ஆப்ஸ் பெவா’ (Op Khas PeWA) சிறப்புச் சோதனையின் மூலம், பல்வேறு வீதி விதிமீறல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு பினாங்கு மாநில சாலை போக்குவரத்து துறையால் விதிக்கப்பட்ட சம்மன்களின் எண்ணிக்கை 1,328-ஐ எட்டியுள்ளது.

அத்துடன், முறையான ஓட்டுநர் உரிமம் இன்றி ஒட்டிய 178 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக மாநில JPJ இயக்குநர் சுல்கிஃப்ளி இஸ்மாயில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

வெளிநாட்டவர்களால் ஓட்டப்பட்ட மொத்தம் 19,239 வாகனங்கள் நிறுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டன. இதில் விதிமீறல்களில் ஈடுபட்ட 638 வாகனங்கள் மீது சட்டப்பூர்வ அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 478 மோட்டார் சைக்கிள்கள் சோதனையிடப்பட்டு, அதில் 154 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேநேரம் 154 கார்கள் சோதனையிடப்பட்டு, அதில் 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.

முறையான ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கும் வெளிநாட்டவர்கள் மீது மட்டுமன்றி, அவர்களுக்குத் தங்களது வாகனங்களை ஓட்ட அனுமதித்த அல்லது வாடகைக்கு விட்ட உள்ளூர் வாகன உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுல்கிஃப்ளி இஸ்மாயில் எச்சரித்துள்ளார்.

சாலைப் பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் பிற அமலாக்க முகமைகளுடன் இணைந்து ‘ஓப்ஸ் பெவா’ சோதனை தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments