Offline
Menu
மலேசிய இந்திய சமூகத்திற்கு மித்ரா திட்டங்கள் மூலம் RM65.5 மில்லியன் நிதி உதவி!
By Administrator
Published on 07/31/2026 18:00
News

மலேசிய இந்திய உருமாற்ற திட்டத்தின் (Mitra) கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மூலம், நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் ஆறு மாதங்களில் மலேசிய இந்திய சமூகத்திற்கு RM65.5 மில்லியனுக்கும் அதிகமான நிதி உதவிகள் சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற, 3,000-க்கும் மேற்பட்ட இந்தியச் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட சந்திப்பு நிகழ்ச்சியில் இத்தகவல்கள் பகிரப்பட்டன.

இந்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மடிக்கணினி உதவி, தமிழ்ப் பள்ளிகளுக்கான (SJKT) ‘ஸ்மார்ட் போர்டு’ (Smart Boards) வசதிகள், கல்வி ஆதரவுத் திட்டங்கள் (கல்வி மடானி, செலிக் மடானி) மற்றும் உயர்கல்விச் சேர்க்கைக்கான நிதியுதவிகள் போன்ற கல்வி சார்ந்த திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

‘ஆரோக்கிய மடானி’ திட்டம், B40 குறைந்த வருமானப் பிரிவினருக்கான நிதியுதவிகள் மற்றும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான டயாலிசிஸ் (Dialysis) சிகிச்சைகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டன.

சிறுதொழில் மேம்பாடு மற்றும் இந்து ஆலயங்களின் பராமரிப்பு/மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடுகள் போன்றனவும் குறிப்பிடத்தக்கவை.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் எந்தவொரு சமுதாயமும் விடுபட்டுவிடக் கூடாது என்பதிலும், அனைத்து மலேசியர்களுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதிலும் ‘மடானி’ (Madani) அரசாங்கம் உறுதியாக உள்ளது.

இந்தியச் சமூகத்தின் நல்வாழ்வுக்காக மித்ரா அமைப்பிற்கு வரலாற்றிலேயே இல்லாத அளவாக RM150 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அரசின் இத்தகைய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உதவிகள் மற்றும் கொள்கைகள் நேரடியாகப் மக்களைச் சென்றடைவதால், அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

Comments