Offline
Menu
மலேசியாவிற்கு வருகை தருமாறு காந்தியின் பேரனுக்கு பிரதமர் அழைப்பு
By Administrator
Published on 08/03/2026 05:22
News

மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்திக்கு மலேசியா வருமாறு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அழைப்பு!

இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைசிறந்த முன்னோடியான மகாத்மா காந்தியின் பேரனும், புகழ்பெற்ற வரலாற்றாசிரியருமான ராஜ்மோகன் காந்தியை, அடுத்த ஆண்டு மலேசியாவிற்கு வருமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளார்.

தனது நீண்டகால நண்பரான ராஜ்மோகன் காந்தியுடன் அண்மையில் தொலைபேசியில் உரையாடியதாக பிரதமர் தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற ஆசிய ஜனநாயகங்கள் குறித்த மாநாட்டில் இருவரும் சந்தித்ததை நினைவுகூர்ந்த அன்வர், அப்போது மலேசியா – இந்தியா இடையேயான வரலாற்று உறவுகள், கல்வி ஒத்துழைப்பு, அறிவுசார் பரிமாற்றம் மற்றும் நாகரிக உரையாடல்களை மேலும் வலுப்படுத்துவது குறித்து கருத்துகளைப் பகிர்ந்ததாக கூறினார்.

மேலும், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மலேசியாவிற்கு வருகை தந்து, கல்வியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களிடம் ஜனநாயகம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட தலைமைத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவுகளை வழங்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

90 வயதான ராஜ்மோகன் காந்தி, மகாத்மா காந்தியின் இளைய மகன் தேவதாஸ் காந்தியின் மகனாவார். வரலாற்றாசிரியர், எழுத்தாளர் மற்றும் கல்வியாளரான அவர், இந்திய அரசியலிலும் பங்களிப்பு செய்து, 1990 முதல் 1992 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

Comments