ஜகார்த்தாவின் சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் வழியாக சுமார் 25 கிலோ எக்ஸ்டஸி போதைப்பொருளைக் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 39 வயதான மலேசிய விமானி கைது செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை இந்தோனேசியாவின் சுங்க மற்றும் கலால் இயக்குநரகம் (DJBC) வெளியிட்டுள்ளது.
DJBC-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியில், விமானி ஒரு வெள்ளி நிற சூட்கேஸையும் மற்றொரு கருப்பு நிற சூட்கேஸையும் எடுத்துச் சென்று, விமானப் பணியாளர்களுக்கான பிரத்யேக விரைவுப் பாதையில் நுழைவது பதிவாகியுள்ளது.
இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் அதிகாரிகள் அவரை சந்தேகத்தின் பேரில் சுங்க பரிசோதனை அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வெள்ளி நிற சூட்கேஸில் இருந்த ஆடைகளுக்குக் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த பல பழுப்பு நிறப் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதிகாரிகள் அந்தப் பொட்டலங்களை அகற்றி ஆய்வு செய்யும் காட்சிகளும், சிறுநீர் பரிசோதனையை ஏமாற்றும் நோக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் போலி சிறுநீர் அடங்கிய சிறிய பாட்டிலையும் கைப்பற்றிய காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்தோனேசிய அதிகாரிகளின் தகவலின்படி, கடந்த ஜூலை 29ஆம் தேதி கைது செய்யப்பட்ட விமானியிடமிருந்து 70,114 எக்ஸ்டஸி மாத்திரைகளும், 2.7 கிராம் மெத்தம்பெத்தமைனும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதற்கு முன்பும் பணியாளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை இந்தோனேசியாவுக்குள் கடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தேசிய காவல்துறையின் போதைப்பொருள் குற்றப்பிரிவு இயக்குநர் எகோ ஹாடி சந்தோசோ, RM50,000 பெறுமதிக்காக ஜகார்த்தாவிற்கு போதைப்பொருட்களை கடத்த ஒப்புக்கொண்டதாக சந்தேக நபர் விசாரணையில் தெரிவித்ததாக கூறினார்.
இதற்கிடையில், ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகம், கைது செய்யப்பட்ட விமானியைத் தூதரக ரீதியாகச் சந்திக்க அனுமதி பெற இந்தோனேசிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், இந்த வழக்கில் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.