Offline
Menu
16 வயதுக்கு குறைவானவர்களுக்கு புதிய கட்டுப்பாடு
By Administrator
Published on 08/05/2026 04:05
News

சமூக ஊடகங்களுக்கு வயது சரிபார்ப்பு கட்டாயம்

கோலாலம்பூர்: மலேசியாவில் குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், சமூக ஊடக தளங்களில் கணக்குத் தொடங்கும் அனைவருக்கும் வயது சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2026 ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த Child Protection Code (CPC)-இன் கீழ், உரிமம் பெற்ற சமூக ஊடக சேவை வழங்குநர்கள் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கணக்குகளை அனுமதிக்க வேண்டும்.

வயது சரிபார்ப்பிற்காக MyKad, கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) தொடர்ந்து கண்காணித்து வருகிறது. விதிமுறைகளை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு Online Safety Act 2025 (Act 866)-ன் கீழ் விளக்கம் கோரும் அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு RM1 மில்லியன் வரை அபராதமும், குற்றம் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் RM100,000 கூடுதல் அபராதமும் விதிக்கப்படலாம். மேலும், கடுமையான மீறல்களுக்கு RM10 மில்லியன் வரை நிதி அபராதம் விதிக்கும் அதிகாரமும் MCMC-க்கு வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை இணையத் துன்புறுத்தல், பாலியல் சுரண்டல், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கம் மற்றும் சமூக ஊடக அடிமைத்தனத்திலிருந்து பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின்படி, 2022 ஜனவரி முதல் 2026 ஜூலை வரை, MCMC மொத்தம் 292,102 இணைய உள்ளடக்கங்களை அகற்றுமாறு கோரிக்கை விடுத்ததில், 96 சதவீதம் வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 17,418 இணையதளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

மேலும், இனம், மதம் மற்றும் அரச குடும்பம் (3R) தொடர்பான சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் மீதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தொடர்பாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments