Offline
Menu
மாற்றுத்திறனாளி மகன் அறைக்குள் உடல் கருகி உயிரிழப்பு!
By Administrator
Published on 08/05/2026 15:00
News

தீ விபத்திலிருந்து மகனைக் காப்பாற்றத் தாய் நடத்திய போராட்டம் தோல்வி

கோலா திரெங்கானு, கம்போங் கோங் தோக் நாசெக் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட கோரத் தீ விபத்தில், தீப்பிழம்புகளுக்கு நடுவே மூன்று முறை புகுந்து தனது மகனைக் காப்பாற்ற முயன்ற தாயின் பாசப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இந்தச் சம்பவத்தில் அவரது மாற்றுத்திறனாளி மகன் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இரவு 10:50 மணியளவில் இந்தத் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது வீட்டின் கீழ்த்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த 59 வயதுடைய ஷாரிஃபா யூசோப் மற்றும் அவரது 64 வயதுக் கணவர் அப்துல் ரஷிட் ஆகிய இருவரையும், வெளியில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டு உடனடியாக எழுப்பி வெளியேற்றியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேறிய பின்னரே, மேல் மாடி அறையில் கற்றல் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளியான தனது மூத்த மகன் அப்துல் லத்தீப் (வயது 41) உறங்கிக் கொண்டிருப்பது தாய்க்கு நினைவுக்கு வந்துள்ளது.

மகனைக் காப்பாற்றத் துடித்த தாய் ஷாரிஃபா, சுழன்றடித்தத் தீப்பிழம்புகளையும் பொருட்படுத்தாமல் பூட்டப்பட்டிருந்த மேல் மாடி அறைக்கதவைத் தட்ட மூன்று முறை வீட்டிற்குள் புகுந்து தீவிரமாகப் போராடியுள்ளார்.

இருப்பினும், தீயின் வேகம் மிகக் கடுமையாகப் பரவியதால் அவரால் மகனின் அறைக்குச் செல்லவோ அல்லது அவரைக் காப்பாற்றவோ முடியாமல் போனது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், தீவிரமாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன்பின்னரே அறைக்குள் சோதனையிட்டபோது, அப்துல் லத்தீப் சடலமாக மீட்கப்பட்டார்.

இத்தீ விபத்தில் குடும்பத்தின் அனைத்துப் பொருட்களும், முக்கியமான ஆவணங்களும் முற்றாக எரிந்து சாம்பலாகின. மகனைக் காப்பாற்றத் தாய் நடத்திய போராட்டம் சோகத்தில் முடிந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments