மலேசிய அரசாங்கத்தின் மானியம் பெற்ற பாக்கெட் சமையல் எண்ணெய்களை சட்டவிரோதமாகச் சேகரித்து, அவற்றை பாட்டில்களில் அடைத்து ‘வழிபாட்டு எண்ணெய்’ என்ற பெயரில் மறுவிற்பனை செய்து வந்த கடத்தல் கும்பலின் சதித்திட்டத்தைக் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) முறியடித்துள்ளது.
கோலாலம்பூர் KPDN அதிகாரிகள் மேற்கொண்ட ‘ஒப்ஸ் திரிஸ் 4.0’ (Ops Tiris 4.0) நடவடிக்கையின் கீழ் செந்தூல் மற்றும் சௌக்கிட் (Chow Kit) பகுதிகளில் உள்ள 4 வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் RM165,000 மதிப்பிலான 9 டன் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
உரிமம் பெற்ற மொத்த வியாபாரிகளிடமிருந்து 1 கிலோகிராம் மானிய பாக்கெட் சமையல் எண்ணெய்களைப் பெற்று, அவற்றை கைகளால் வெட்டி 1, 2, 5 மற்றும் 15 கிலோ பாட்டில்களில் ஊற்றி அடைத்துள்ளனர். பின்னர் அதற்கு வழிபாட்டு எண்ணெய் எனப் போலி லேபிள் ஒட்டி கிள்ளான் பள்ளத்தாக்கு சில்லறைச் சந்தைகளில் விற்பனை செய்துள்ளனர்.
ஒரு லிட்டர் மானியச் சமையல் எண்ணெய்யை RM2.45 என்ற மானிய விலையில் வாங்கும் இந்தக் கும்பல், அதை வழிபாட்டு எண்ணெய்யாக மாற்றி ஒரு லிட்டரை RM7.50 வரை அதிக விலைக்கு விற்று வந்துள்ளது.
ஒரு வளாகத்தில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 200 பாட்டில்கள் அல்லது 1 டன் அளவிலான மானிய எண்ணெய் இவ்வாறாக சட்டவிரோதமாக மாற்றப்பட்டு வந்துள்ளது. இக்கும்பல் கடந்த 6 மாதங்களாக இயங்கி வந்ததாக நம்பப்படுகிறது.
இந்த அதிரடி சோதனையின் போது 30 முதல் 35 வயதுக்குட்பட்ட 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள், ஒரு இலங்கை நாட்டவர் மற்றும் வேன் ஓட்டுநராகப் பணியாற்றிய ஒரு உள்ளூர் மலேசியரும் அடங்குவர்.
இந்தச் சட்டவிரோத நெட்வொர்க்கை இயக்கி வந்த முக்கியச் சூத்திரதாரியான உரிமம் பெற்ற மொத்த வியாபாரியை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாடு சட்டம் (Control of Supplies Act 1961) மற்றும் 2011-ஆம் ஆண்டு வர்த்தக விவரிப்புச் சட்டம் (Trade Descriptions Act 2011) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.