Offline
Menu
2 கார்களை முந்திச் செல்ல முயன்றபோது நேர்ந்த விபரீதம்
By Administrator
Published on 09/23/2026 15:00
News
இரு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த இரு மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இன்று பிற்பகல் 1.51 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ‘யமஹா Y15’ (Yamaha Y15) ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயதிற்குட்பட்ட இரு மாணவர்களும் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

“ஆரம்பக்கட்ட விசாரணையில், இரு மாணவர்களும் சிம்பாங் கென்யும் பகுதியிலிருந்து ஞியோர் சபாங் நோக்கிப் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது, ஒரே திசையில் சென்று கொண்டிருந்த இரு கார்களை அவர்களின் மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முயன்றதாக” லங்காவி மாவட்டக் காவல் துறைத் தலைவர் கைருல் அசார் நூருடின் கூறினார்.

 

அப்போது, எதிர்திசையில் வந்த மற்றொரு கார் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் பலமாக மோதியுள்ளது.

 

இந்த பலத்த மோதலின் காரணமாக இரு சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்தில் தொடர்புடைய மூன்று கார்களின் ஓட்டுநர்களுக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றபோதிலும், அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

 

பலியான இரு மாணவர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகச் சுல்தானா மலிஹா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காகக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Comments