Offline
Menu
15 வயது சிறுமியுடன் ஹோட்டலில் தங்கிய வாலிபர்
By Administrator
Published on 09/23/2026 15:00
News
10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6 பிரம்படிகள்

தனது 15 வயது காதலியுடன் இருமுறை விடுதியில் தங்கி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, 24 வயது வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 6 பிரம்படிகளும் விதித்து கோத்தா கினபாலு செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

தமக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளையும் சந்தேக நபரான முகமட் அஷ்ரிஃப் ஹைக்கல் சாம்லி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி மோனிகா லின்சுவா இந்தத் தண்டனையை வழங்கினார்.

 

கடந்த ஜனவரி 23 மற்றும் மார்ச் 24 ஆகிய தேதிகளில் சிபித்தாங்கில் உள்ள ஒரு விடுதி அறையில் 15 வயதான சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376(1)-இன் கீழ் அவருக்கு இரண்டு குற்றச்சாட்டுகளில் தண்டனை விதிக்கப்பட்டது.

 

அதேபோல, அதே தேதிகளில் சிறுமிக்கு பாலியல் அத்துமீறல் இழைத்த குற்றத்திற்காக, 2017-ஆம் ஆண்டு சிறுவர்களுக்கெதிரான பாலியல் குற்றச் சட்டத்தின் பிரிவு 14(a)-இன் கீழ் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளில் தண்டனை வழங்கப்பட்டது.

 

“அனைத்துச் சிறை தண்டனைகளும் அவர் கைது செய்யப்பட்ட மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏககாலத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் அவர் மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 பிரம்படிகளையும் அனுபவிக்க நேரிடும்.”

 

கடந்த மார்ச் 25-ஆம் தேதி, சிறுமி மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை வீட்டிலிருந்து காணாமல் போனதைக் கண்டு அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமி வீடு திரும்பியபோது, அவரது கழுத்தில் சிவந்த காயம் இருப்பதை தாய் கவனித்தார். விசாரணையில், காதலனான முகமட் அஷ்ரிஃப் உடன் தங்கியிருந்ததாகச் சிறுமி ஒப்புக்கொண்டார்.

 

மார்ச் 26 அன்று நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், சிறுமியின் உடலில் பாலியல் அத்துமீறல் நடந்ததற்கான சான்றுகளும், கழுத்தில் காயங்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 

15 வயது சிறுமி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் முதிர்ச்சியடையாதவர் என்பதையும், இக்குற்றம் ஒரே நாளில் நடத்தப்படாமல் இரு வேறு தேதிகளில் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி, கடுமையான தண்டனை வழங்குமாறு அரசு தரப்பு வக்கீல் வலியுறுத்தினார்.

Comments