Offline
Menu
சிரம்பான் நீதிமன்றத்தில் குழந்தைகளை காயப்படுத்திய வழக்கில் தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டார்!
By Administrator
Published on 08/20/2026 16:00
News

நெகிரி செம்பிலான் மாநிலம் சிரம்பான் செஸன்ஸ் நீதிமன்றத்தில், தனது 1 வயது மகளுக்கும், 15 வயது வளர்ப்பு மகளுக்கும், உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும், குற்றம் சாட்டப்பட்ட 35 வயது நபர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நீதிபதி குனசுந்தரி மாரிமுத்து முன்பாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், முதல் குற்றச்சாட்டின் கீழ், பாதிக்கப்பட்ட சிறுமியின் 44 வயது தாயாரும், குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

நீலாய், கம்போங் ஜெராங்காங் டாராட் பகுதியில் உள்ள வீட்டில் கடந்த ஆகஸ்ட் 12 மற்றும் ஜூலை 22 ஆகிய தேதிகளில் இந்தச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டம் பிரிவு 31(1)(a) மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 34இன் கீழ் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கணவருக்கு 19,000 ரிங்கிட் பிணையும் மனைவிக்கு 8,000 ரிங்கிட் பிணையும் நிர்ணயித்ததுடன், வழக்கின் தீர்ப்பை வரும் செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Comments