Offline
Menu
14 வயது பள்ளி மாணவியின் மர்ம மரணம்: 92 சாட்சிகளிடம் கோலாலம்பூர் போலீஸ் விசாரணை!
By Administrator
Published on 08/23/2026 18:29
News

கோலாலம்பூர், ஜாலான் லங்காவியில் உள்ள வீடொன்றில் 14 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இதுவரை 92 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சூஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.59 மணியளவில் மாணவியின் தாயாரிடமிருந்து அவசர அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடனடியாகக் கோலாலம்பூர் மருத்துவமனையின் (HKL) அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்ட அம்மாணவி, அதிகாலை 2.25 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

ஸ்தாபாக்கில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்த இம்மாணவியின் உடற்கூறாய்வு முடிவடைந்த நிலையில், ஸ்தாபாக் போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி முதற்கட்டமாகத் ‘திடீர் மரணம்’ என வழக்குப்பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை இரவு 7.49 மணியளவில் மாணவியின் தாய் அளித்த மற்றொரு புகாரின் பேரில், வாங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை தீவிர விசாரணையில் இறங்கியது.

இந்த வழக்கு தொடர்பான உண்மைத்தன்மையைக் கண்டறிய இதுவரை 92 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 507B-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் தேவையற்ற ஊகங்களையோ அல்லது வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், வழக்கின் புலனாய்வு அதிகாரி உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) பால்தேவ் சிங்கை 03-9289 9222 / 012-4806062 ஆகிய எண்களிலோ அல்லது கோலாலம்பூர் போலிஸ் ஹாட்லைன் 03-2115 9999 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

 

 

Comments