Offline
Menu
தாய்லாந்து அதிகாரிகளின் நடவடிக்கையால் மலேசிய நெட்டிசன்கள் கொந்தளிப்பு!
By Administrator
Published on 08/23/2026 18:32
News

தாய்லாந்திற்குச் செல்லும் மலேசியச் சுற்றுலாப் பயணிகளை அங்குள்ள காவல் துறையினர் சாலை ஓரத்தில் நிறுத்தி அத்துமீறி சோதனை செய்வதாகக் குற்றம் சாட்டி, தாய்லாந்து சுற்றுப்பயணத்தைப் புறக்கணிக்குமாறு மலேசிய சமூக வலைத்தளப் பயனர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

டிக்டாக் தளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், காரின் பின்பகுதியில் நிற்கும் மலேசியப் பயணி ஒருவரைத் தாய்லாந்து போலிசார் தீவிரமாகச் சோதனை செய்வது பதிவாகியுள்ளது.

சாதாரண சோதனையாக இல்லாமல், அந்த ஆடவரின் காலணிகளைக் கழற்றச் சொல்லி, அவரின் பாதப் பகுதிகள் வரை போலீசார் விரிவாகச் சோதனை செய்வது அந்நாட்டின் நடைமுறை குறித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, தாய்லாந்து சென்றபோது தங்களுக்கும் இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதாகப் பல மலேசிய நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

பகல் நேரத்திலும், நள்ளிரவிலும் முகத்தை மூடிக்கொண்டு துப்பாக்கிகளுடன் வந்த தாய்லாந்து போலீசார், தன்னை மிகப்பெரிய குற்றவாளியைப் போலச் சோதனை செய்ததாக ‘ஹைடீல்’ (@Haiydeel) என்ற பயனர் தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளார்.

‘இஜோய்’ (@Iejoi) என்பவர் கூறுகையில், “மலேசியப் பயணிகளைத் தாய்லாந்து போலீசார் அச்சுறுத்துவதையோ அல்லது பயன்படுத்திக்கொள்வதையோ நாம் அனுமதிக்கக் கூடாது. மலேசியர்களுக்கு என்று சுயமரியாதை உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆண்டின் இறுதி வரை தாய்லாந்து பயணங்களைப் புறக்கணிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மலேசியச் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பணத்தைப் பறிக்கும் நோக்கிலேயே அங்குள்ள அதிகாரிகள் தற்போது அடிக்கடி இதுபோன்ற தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக மற்றொரு பயனர் குற்றம் சாட்டியுள்ளார்.

இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், தாய்லாந்து செல்லும் மலேசியர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Comments