Offline
Menu
உள்நாட்டுச் சேவைகளை ஏற்க மலேசியா ஏர்லைன்ஸ், பாத்திக் ஏரிடம் அரசு பேச்சுவார்த்தை!
By Administrator
Published on 09/17/2026 16:00
News

நிதி நெருக்கடியில் தவித்து வரும் பிரபல மலிவுக்கட்டண விமான நிறுவனமான ‘ஏர்ஏஷியா’வின் (AirAsia) உள்நாட்டுச் சேவை மற்றும் விற்பனைப் பங்கைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் பாத்திக் ஏர் நிறுவனங்களிடம் மலேசிய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மலிவுக்கட்டண விமான நிறுவனமான ஏர்ஏஷியாவின் நிதிநிலையை மலேசிய அரசு அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ஏர்ஏஷியா சந்தித்து வரும் நிதிச் சிக்கல்கள் குறித்துக் கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கும் மலேசியா ஏர்லைன்ஸ், பாத்திக் ஏர் நிறுவனங்களுக்கும் இடையிலான ஆலோசனைகள் அண்மை வாரங்களில் தீவிரமடைந்துள்ளன.

 

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்ட போர் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் விமான எரிபொருள் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்ததே ஏர்ஏஷியாவின் நிதி நெருக்கடிக்கு முதன்மைச் சவாலாக அமைந்தது.

“இரண்டாம் காலாண்டில், அதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் விமான எரிபொருள் விலை 66 சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 183 அமெரிக்க டாலராக அதிகரித்ததால் ஏர்ஏஷியா பெரும் நிதிச்சுமைக்கு உள்ளானது.”

 

மலேசிய நிதி அமைச்சு மற்றும் மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹட் (MAHB) ஆகியவை இணைந்து நடத்தி வரும் இந்த ஆலோசனைகள், ஏர்ஏஷியாவின் நிதி நெருக்கடியை மேலாண்மை செய்வதற்கான விரிவான முன்னெச்சரிக்கை திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

 

வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து புதிய மூலதனத்தைத் திரட்டுவதற்கான ஏர்ஏஷியாவின் முயற்சியை வலுப்படுத்த அரசாங்கம் வழங்கக்கூடிய சாத்தியமான ஆதரவுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எத்தகைய அளவில் அரசு ஆதரவு அளிக்கும் என்ற துல்லியமான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதனிடையே, ஏர்ஏஷியாவின் விமானக் குத்தகை (Aircraft Leases) ஒப்பந்தங்களைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தால் மட்டுமே, அதன் உள்நாட்டுச் செயல்பாடுகளைப் பெருமளவில் தங்களால் பொறுப்பேற்க முடியும் என மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் பாத்திக் ஏர் ஆகிய இரு நிறுவனங்களும் அரசாங்கத்திடம் தெளிவுபடுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments