Offline
Menu
3,833 கிராமப்புறச் சாலை விளக்குகளுக்கு மாநில அரசு ஒரு கோடி ரிங்கிட் ஒதுக்கீடு
By Administrator
Published on 09/17/2026 16:00
News

ஜோகூர் மக்களின் பாதுகாப்பையும் கிராமப்புறங்களின் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் வகையில், மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் மொத்தம் 3,833 கிராமப்புறச் சாலை விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.

இத்திட்டம் இம்மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை கட்டங்கட்டமாகச் செயல்படுத்தப்படும் என்று ஜோகூர் மாநில விவசாயம், வேளாண் தொழில் மற்றும் ஊரக மேம்பாட்டுக் குழுத் தலைவர் அஸ்ராக் அப்துல்லா தெரிவித்தார்.


இத்திட்டத்தின் கீழ் செகாமாட், பத்து பஹாட், குளுவாங், பொந்தியான், தங்காக், மூவார் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

2026ஆம் ஆண்டுக்கான கிராமப்புறச் சூரிய மின்சக்தி சாலை விளக்குத் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகளைச் செகாமாட்டில் உள்ள கம்போங் மென்சுட் லாமா, கம்போங் கெலாங் சின்சின் ஆகிய பகுதிகளில் நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

 

மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபிஸ் காஸி தலைமையிலான ஜோகூர் மாநில அரசு, முதலாவது கட்டமாக 3,333 சூரிய மின்சக்தி சாலை விளக்குகளைப் பொருத்துவதற்கு ஒரு கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.


மேலும் 500 சாலை விளக்குகள் ஊரக, வட்டார மேம்பாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பொருத்தப்படவுள்ளன.

சாலை விளக்குகளுக்கான குழிகளைத் தோண்டுதல், கம்பங்களை நிறுவுதல், சூரிய மின்சக்தி விளக்குகளைப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதைத் தாம் நேரில் கண்டறிந்ததாக அஸ்ராக் அப்துல்லா கூறினார்.

 

கிராமப்புறச் சாலைகள் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு குறித்து எழுந்த புகார்கள், கோரிக்கைகள், கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

 

இப்பிரச்சினைகள் சட்டமன்றத் தொகுதி நடவடிக்கைக் குழுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட பின்னர், கள நடவடிக்கையாக மாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Comments