Offline
Menu
11 எரிபொருள் நிலையங்களில் அதிரடி சோதனை
By Administrator
Published on 10/07/2026 16:00
News
RON95 பெட்ரோலில் தண்ணீர் கலக்கப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் சர்ச்சை

அலோர் ஸ்டார்:

கெடா மாநிலத்தில் உள்ள சில எரிபொருள் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் RON95 பெட்ரோலில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவிய புகார்களைத் தொடர்ந்து, 11 பெட்ரோல் நிலையங்களில் இருந்து பெட்ரோல் மாதிரிகளைச் சேகரித்து உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

 

குறிப்பிட்ட சில எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் நிரப்பிய பிறகு தங்களின் வாகனங்கள் வழியிலேயே பழுதாகி நின்றுவிட்டதாகப் பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கெடா மாநில KPDN இயக்குநர் முஹமட் நிஜாம் ஜமாலுதீன் தெரிவித்தார்.

 

“எங்கள் அமலாக்கக் குழுவினர் இன்று 11 பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தி, சம்பந்தப்பட்ட சேமிப்புத் தொட்டிகள் மற்றும் பம்புகளில் இருந்து பெட்ரோல் மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். தொடக்கக் கட்ட கையேடு பரிசோதனை மற்றும் தானியங்கி தொட்டி அளவீட்டு முறை (ATG) ஆய்வில் தண்ணீரின் இருப்பு உடனடியாகக் கண்டறியப்படவில்லை என்றாலும், மாதிரிகள் வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக” அவர் சொன்னார்.

 

அலோர் ஸ்டார், குபாங் பாசு, சுங்கை பட்டாணி மற்றும் கூலிம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு, விநியோகப் ரசீதுகள் மற்றும் விற்பனைப் பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

 

வேதியியல் துறையின் இறுதிப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்டச் சட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதுமக்கள் இதுகுறித்த புகார்களை 019-848 8000 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது KPDN ‘EzADU’ செயலி வழியாகத் தெரிவிக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

Comments