Offline
Menu
தீபாவளி விடுமுறை முடிந்து நகரங்களுக்கு திரும்பும்போது
By Administrator
Published on 11/10/2026 13:00
News
நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு!

கோலாலம்பூர்,

தீபாவளி மற்றும் கூடுதல் பள்ளி விடுமுறைகளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் நகரங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், மலேசியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று பிற்பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக இருந்ததாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் (LLM) தெரிவித்துள்ளது.

 

இருப்பினும், வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில் (PLUS) யோங் பெங்கிலிருந்து ஆயர் ஹித்தாம் நோக்கிச் செல்லும் தென்திசைப் பாதையில் ஏற்பட்ட விபத்து காரணமாக வாகன நெரிசல் பதிவாகியுள்ளது.

 

நெடுஞ்சாலையின் 82.3ஆவது கிலோமீட்டர் பகுதியில் லோரி ஒன்றும் காரும் சம்பந்தப்பட்ட விபத்து இடம்பெற்றதாகவும், அதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் நெடுஞ்சாலை ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, கிள்ளான் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையில் இன்று காலை வரை குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படவில்லை. இன்று கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குக் கரையோர மாநிலங்களிலிருந்து தலைநகரை நோக்கி மக்கள் திரும்புவதால், காலை 10 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.

 

இதற்கிடையில், வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து நிலவி வருவதால், நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

குறிப்பாக, திடீரென வாகனங்களை நிறுத்த வேண்டிய சூழ்நிலைகளில் விபத்துகளைத் தவிர்க்க, முன்னால் செல்லும் வாகனங்களுடன் போதுமான பாதுகாப்பு இடைவெளியைப் பேணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments