கோலாலம்பூர்,
மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நீதிமன்ற ஆவணங்களில் வெளிப்படையான தவறுகள் இருப்பதாக நாட்டின் சட்டத்துறைத் தலைவர் மொஹமட் டுசுக்கி மொக்தார் தெரிவித்துள்ளார்.
SRC International ஊழல் வழக்கில் நஜிப்பிற்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வெளியிட்ட விடுவிப்பு உத்தரவில் (Order of Discharge) குறைபாடுகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரித்தா ஹரியான் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆவணங்களின் ஒவ்வொரு விவரத்தையும் முறையாகச் சரிபார்த்திருந்தால் இத்தகைய தவறுகள் ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனமாகச் செயல்பட்டிருந்தால் இது நடந்திருக்கா . தவறுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அவை தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன,” என்று அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, நீதிமன்ற ஆவணங்களில் பயன்படுத்தப்பட்ட சட்டச் சொற்கள் மற்றும் சட்டப் பிரிவுகளின் தெளிவுத்தன்மை தொடர்பாகக் குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நஜிப்பிற்கு விதிக்கப்பட்ட 5 கோடி ரிங்கிட் அபராதம் அம்னோ கட்சியால் தொடங்கப்பட்ட ஒற்றுமை நிதியின் மூலம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், நஜிப்பிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடனான அரச மன்னிப்பு மற்றும் நீதிமன்றத்தின் விடுவிப்பு உத்தரவு ஆகியவற்றின் சட்டரீதியான விளைவுகள் குறித்து மறுஆய்வு மேற்கொள்ளப்படும் வரை வீட்டுக்காவல் நடைமுறையை ஒத்திவைக்குமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் கோரியுள்ளது.
இந்த இரண்டு விவகாரங்களும் அரச மன்னிப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலான சட்டக் கேள்விகளை எழுப்புவதாக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
அதேவேளையில், நஜிப்பிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடனான அரச மன்னிப்பை எதிர்ப்பது தங்களது நோக்கமல்ல என்றும், நீதிமன்ற உத்தரவின் சட்டரீதியான விளைவுகளைத் தெளிவுபடுத்துவதே நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.