கோலாலம்பூர்,
நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கிளந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் சபா ஆகிய நான்கு மாநிலங்களின் பல பகுதிகளில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் நவம்பர் 11ஆம் தேதி புதன்கிழமை வரை பருவமழைக் காற்றின் தாக்கம் நீடிக்கக்கூடும் என்பதால், குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் கிழக்கு சபாவிலும் தொடர்ச்சியான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மொகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8.30 மணிக்கு வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட வானிலை அறிக்கையின்படி, கிளந்தான் மாநிலத்தின் பாஞ்சோக், கோத்தா பாரு, தும்பாட், பாசீர் மாஸ் மற்றும் பாசீர் பூத்தே ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு கடுமையான தொடர் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று திரெங்கானு மாநிலத்தின் பெசூட், செத்தியூ, டுங்குன், கெமாமான், மாராங், கோலா திரெங்கானு மற்றும் கோலா நெரூஸ் ஆகிய பகுதிகளுக்கும் கடுமையான கனமழை எச்சரிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கிளந்தான் மாநிலத்தின் தனா மேரா, மாச்சாங், கோலா கிராய் மற்றும் ஜெலி ஆகிய மாவட்டங்களுக்கும், திரெங்கானுவின் உலு திரெங்கானு பகுதிக்கும் தொடர் மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பகாங் மாநிலத்தின் குவாந்தான், பெக்கான், ரொம்பின் மற்றும் ஜெராந்துட் பகுதிகளும், சபா மாநிலத்தின் குடாட், பைத்தான், தெலுப்பிட், லாபுக் மற்றும் சுகுட், சண்டகான், கினாபத்தாங்கான் ஆகிய பகுதிகளும் முன்னெச்சரிக்கை அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.
பருவமழைக் காற்றின் தாக்கத்தால் தொடர்ச்சியாகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் அண்மைய வானிலை எச்சரிக்கைகளை MetMalaysia அதிகாரப்பூர்வ இணையத்தளம், myCuaca செயலி மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். அவசர வானிலைத் தகவல்களுக்கு 1-300-22-1638 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.