மலேசியாவில் மின்சார வாகனங்களுக்கான (EV) சார்ஜிங் நிலையங்களை விரைவாக அதிகரிக்கும் நோக்கில், மின்சார வாகனங்களுக்கு புதிய கட்டணம் (EV Levy) விதிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு (MITI) தெரிவித்துள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 30,000 மின்சார வாகன சார்ஜிங் மையங்களை அமைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும்.
இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது இதனைத் தெரிவித்த அமைச்சின் துணையமைச்சர் சிம் ஸீ ஸின், மின்சார வாகனங்களுக்கான புதிய கட்டணம் விதிப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அதன் செலவுகள், பயன்கள் மற்றும் மின்சாரக் கட்டமைப்பின் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, மலேசியா முழுவதும் 7,341 பொது மின்சார வாகன சார்ஜிங் முனைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் 4,992 சாதாரண AC சார்ஜர்களும், 2,349 அதிவேக DC சார்ஜர்களும் அடங்குகின்றன.
மேலும், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்விடங்கள், இடைநிறுத்தப் பகுதிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் 148 அதிவேக DC சார்ஜர்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களிலும் சார்ஜிங் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்தின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
புதிய சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்குத் தேவையான மின்சாரத் துணை நிலையங்களை உருவாக்குவதற்கு அதிக முதலீடும் திட்டமிடலும் தேவைப்படுவதால், அவற்றை உடனடியாக அமைக்க முடியாது என்றும் அவர் விளக்கினார்.
தற்போது 20 சார்ஜிங் நிலைய இயக்குநர் நிறுவனங்கள் இந்தக் கட்டமைப்பு விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களின் முதலீட்டையும் அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் இடங்களில் போதுமான வாடிக்கையாளர் தேவை இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும், முதலீட்டுச் செலவுகளுக்கு ஏற்ப பயன்கள் கிடைப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் துணையமைச்சர் தெரிவித்தார்.