Offline
Menu
RM1.27 மில்லியன் மதிப்பிலான சுகாதார, அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல் – மூவர் கைது!
By Administrator
Published on 11/21/2026 13:00
News

சிலாங்கூர் மாநிலத்தின் பந்திங் பகுதியில் உள்ள சரக்குக் கையாளும் நிறுவனம் ஒன்றில் போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில், RM1.27 மில்லியன் மதிப்பிலான மருத்துவப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் என நம்பப்படும் உள்ளூர் ஆடவர் ஒருவரும், அங்கு பணியாற்றிய இரண்டு வங்காளதேச ஆடவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 12.10 மணியளவில் ‘Op Taring Dosej’ என்ற பெயரில் இந்தச் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் கீழ் செயல்படும் வனவிலங்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (WCB/PSK), பல்வேறு அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து இந்தச் சோதனையை நடத்தியது.

இதுகுறித்து புக்கிட் அமான் WCB/PSK பிரிவின் தளபதி டத்தோ முகமட் ஸாக்கி அஷார் இன்று வெளியிட்ட அறிக்கையில், சோதனையின்போது பல்வேறு வகையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அவற்றில் 1,044 பெட்டிகளில் மருத்துவ மற்றும் அழகுசாதனப் பொருட்கள், 1,300 போத்தல்களில் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப் பொருட்கள், 38 பெட்டிகளில் ட்ரெமெல்லா சூப் வகைகள் மற்றும் 65 பெட்டிகளில் கோஎன்சைம் Q10 பொருட்கள் ஆகியவை அடங்கும்.

மேலும், தேயிலை சார்ந்த உணவு மற்றும் பானப் பொருட்கள், சிற்றுண்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM1.27 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சுகாதார அமைச்சின் கீழ் RM1.26 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளையில், கோலா லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் RM5,167 மதிப்பிலான பொருட்களும், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் கீழ் RM4,745 மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சோதனையில் சிலாங்கூர் மாநில மருந்தகப் பிரிவு, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, மலேசிய சுங்கத் துறை, கோலா லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் கோலா லங்காட் நகராட்சி மன்றம் ஆகிய அமைப்புகளும் பங்கேற்றன.

இதனிடையே, கோலா லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகம் இரண்டு குற்றங்களுக்காக மொத்தம் RM4,500 அபராத அறிவிப்புகளை வழங்கியுள்ளது.

கோலா லங்காட் நகராட்சி மன்றமும் இரண்டு குற்றங்களுக்காக RM2,000 அபராத அறிவிப்புகளை வழங்கியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம், 1984ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகள், 2011ஆம் ஆண்டு வர்த்தக விளக்கச் சட்டம் மற்றும் 1983ஆம் ஆண்டு உணவுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்காகச் சம்பந்தப்பட்ட அமலாக்க அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களின் விநியோகத்தைத் தடுப்பதற்காகப் போலீசார் தொடர்ந்து உளவுத்துறை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவார்கள் என்று முகமட் ஸாக்கி தெரிவித்தார்.

Comments