Offline
Menu
ஈரானில் விஷ சாராயம் குடித்த 26 பேர் உயிரிழப்பு
Published on 10/05/2024 12:12
News

டெஹ்ரான்,ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடுமையான சட்டங்களைக் கொண்ட இஸ்லாமிய ஆட்சி அமைந்த பிறகு, மது அருந்துதல் தடை செய்யப்பட்டது. இருப்பினும் ஈரானியர்கள் பலர் கள்ளச்சந்தைகளில் மதுபானங்களை வாங்குகின்றனர். மேலும் வீட்டிலேயே சிலர் சாராயம் தயாரித்து குடிக்கின்றனர்.

இந்த நிலையில், ஈரானின் வடக்கு மாகாணங்களில் உள்ள மசர்தரன் மற்றும் கிலன் ஆகிய பகுதிகளிலும், மேற்கு ஹமதான் மாகாணத்திலும் மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தை குடித்த 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஷ சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அரசு ஊடகமான ஐ.ஆர்.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களுக்கு சாராயம் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஈரானில் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் அந்நாட்டின் கள்ளச்சந்தைகளில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே சமயம், ஈரானில் மருந்து உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் ஏராளமான ஆல்கஹால் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

சமீபத்திய ஆண்டுகளில் ஈரானில் விஷ சாராயம் குடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஈரானில் விஷ சாராயம் குடித்து சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments