Offline
16 ஆண்டுகளாக மாமியாரால் சிறைவைக்கப்பட்ட பெண் மீட்பு
Published on 10/08/2024 02:29
News

மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் 16 ஆண்டுகளாக மாமியாரால் சிறைவைக்கபப்ட்ட பெண் மீட்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷன் லால் சாஹு. இவரது மகள் ராணு சாஹூ. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவருக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் அவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில்தான் 2008-ம் ஆண்டுக்கு பின்னர் ராணு சாஹூவை அவரது மாமியார் கொடுமைப்படுத்த தொடங்கினார். மகனை விட்டு அவரை பிரித்த மாமியார் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக ராணு சாஹூவை அறையில் அடைத்து வைத்து கைதி போல நடத்தியுள்ளார்.

கிஷன் லால் சாஹு மற்றும் அவரது உறவினர்களையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

இதனால் ராணு சாஹூவின் உடல் நிலை மோசமானது. அவர் எலும்பும் தோலுமாக மாறி சாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதை அறிந்த கிஷன் லால் சாஹூ மகள் ராணுவை மீட்டு சிகிச்சை அளித்து கணவன், மாமியார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினார்.

இதையடுத்து  போலீஸார் அதிரடியாக அங்கு சென்று ராணுவை மீட்டனர். போலீஸார்  ராணுவை பார்த்ததும் அவளின் நிலையை கண்டு திகைத்தனர். 16 வருடங்களாக சிறைபிடிக்கப்பட்ட ராணு மெலிந்துள்ளார். எலும்புகளில் தோல் ஒட்டிக்கொண்டது. ராணு பேசும் நிலையில் இல்லை, அவள் நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Comments