ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது ஒவ்வொரு இஸ்லாமியரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ஐந்து ஒழுக்கங்களில் ஒன்றாகும். ரமலான் நோன்பு காலத்தில் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்வதை ஏராளமானோர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பிறையை அல்லது சந்தினை அடிப்படையாகக் கொண்டு ரமலான் மாதம் கணக்கிடப்படுகிறது. அதனடிப்படையில் மலேசியாவிலுள்ள இஸ்லாமிய அன்பர்கள் இன்று முதல் ரமலான் நோன்பை மேற்கொள்வார்கள் என்று நேற்று அரசு முத்திரைக் காப்பாளர் தெரிவித்தார்.
இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம் ரமலான் ஆகும். இஸ்லாமியர்கள் புனித மாதமாக போற்றும் இந்த மாதம் முழுவதும் நோன்பு கடைபிடித்தும், திருக்குரான் ஓதியும், தானங்கள் செய்வதும் வழக்கம்.
ரமலான் நோன்பு விதிகள் எவை?
ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் துவங்கி, சூரிய அஸ்தமனம் வரை உணவு, தண்ணீர் ஏதும் எடுத்துக் கொள்ளாமல் தொழுகை, இறை சிந்தனை, மற்றவர்களுக்கு உதவுதல், மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றையே முக்கிய கடமையாக கொண்டு இருப்பார்கள்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர் நோன்பு கடைபிடிப்பது ஏன் ?
சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, வசதி இல்லாதவர்களுக்கு உதவுவது, இறை வழிபாட்டில் ஈடுபடுதல், திருக்குரான் ஓதுதல், பெருந்தன்மை மற்றும் பொறுமையை கடைபிடித்தல், இறைவனுடனான உறவினை பலப்படுத்திக் கொள்ளுதல், குரானில் சொல்லப்பட்ட நெறிகளின் வழி நடப்பது ஆகியவற்றை வலியுறுத்துவதே இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் ரமலான் நோன்பு கடைபிடிப்பதன் நோக்கமாகும்.
இப்தார் (iftar) என்றால் என்ன ?
ரமலான் நோன்பு இருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் மாலையில் சூரியன் மறைந்த பிறகு உணவு எடுத்துக் கொள்வார்கள். நோன்பு துறக்கும் போது அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவிற்கு இப்தார் என்று பெயர். பெரும்பாலும் நண்பர்கள், குடும்பத்தினர்கள் ஆகியோர் ஒன்று கூடி நோன்பு துறப்பார்கள்.
ரமலான் நோன்பு கடைபிடிப்பதால் என்ன பலன்?
ரமலான் நோன்பு கடைபிடிப்பதால் உடலுக்கும், மனதிற்கும் பல நன்மைகள் ஏற்படுகிறது. ரமலான் நோன்பு இருப்பதால் ஆன்மா தூய்மை அடைகிறது, சுய ஒழுக்கம் மற்றும் சுய கட்டுப்பாடு மேம்படும், அல்லாஹ் உடனான உறவு பலப்படும். உடல் ரீதியாக ரத்த சர்க்கரை அளவானது கட்டுப்படும், தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்படும். உடல் பலவீனமாக இருப்பவர்கள் டாக்டரின் ஆலோசனையை பெற்று நோன்பினை துவங்கலாம்.