கோலாலம்பூர்:
இன்று காலை 9 மணி நிலவரப்படி, தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மொத்தம் 9,027 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் பகாங் மாநிலத்தின் குவாந்தான் மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் கட்டளை மையத்தின் தகவலின்படி, பகாங் மாநிலத்தில் மட்டும் 8,074 பேர் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6,470 பேர் குவாந்தான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
மாரான் மாவட்டத்தில் 770 பேர், பெக்கானில் 501 பேர், மற்றும் ரொம்பினில் 333 பேர் பாதுகாப்பு மையங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
திரெங்கானு மாநிலத்தில், கெமாமன் மற்றும் டுங்கன் மாவட்டங்களில் 606 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஜோகூர் மாநிலத்தின் மெர்சிங் மாவட்டத்தில் 347 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
வானிலை ஆய்வு மையம், குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் பகுதிகளில் நேற்று முதல் இன்று வரை மிக கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குவாந்தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல துணை மின்நிலையங்களை தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) தற்காலிகமாக மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.