Offline
Menu
இந்திய சமூகத்தின் ஆவணப் பிரச்சினைகளுக்குத் தீர்வு: 96 விழுக்காடு MyKAS விண்ணப்பங்களுக்கு உள்துறை அமைச்சு ஒப்புதல்
By Administrator
Published on 07/17/2026 10:00
News

நாட்டில் ஆவணப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களின் பின்னணி அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல், நியாயமான, வெளிப்படையான, சட்டபூர்வமான பரிசீலனை வழங்கப்பட உரிமை உண்டு என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ள அவர், இந்தியச் சமூகத்தினரிடையே நிலவும் ஆவணப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

​அமைச்சர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே 31, 2026 வரையிலான காலக்கட்டத்தில், இந்தியக் குடிமக்கள் சம்பந்தப்பட்ட MyKAS (தற்காலிக வசிப்பிட அடையாள அட்டை) விண்ணப்பங்களில் 96 விழுக்காடு வெற்றிகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில், இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் தாமதமான பிறப்புப் பதிவு விண்ணப்பங்களில் 90 விழுக்காடு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

​தொடர்ந்து குறிப்பிட்ட அமைச்சர், குடியுரிமை விண்ணப்பங்களைப் பொறுத்தமட்டில், நாட்டின் இறையாண்மை சார்ந்த விஷயம் என்பதால் அதன் செயல்முறைகள் மிகவும் விரிவானதாகவும் கடுமையானதாகவும் இருக்கும் என்றார்.

ஒவ்வொரு குடியுரிமை விண்ணப்பமும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்னதாக மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், தேசியப் பதிவு முறையின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்தும் அதே வேளையில், தகுதியுடையவர்களுக்கு அவர்களின் உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வதே தங்களின் மாறாத அர்ப்பணிப்பு என்றும் சைபுடின் அந்தப் பதிவில் உறுதியளித்துள்ளார்.

Comments