Offline
Menu

LATEST NEWS

சுங்கை பெசாரில் 2 டிரெய்லர்கள் மோதி விபத்து! 7 மாதக் கர்ப்பிணி மனைவி படுகாயம், கணவர் பலி!
By Administrator
Published on 07/18/2026 09:00
News

ஜோகூர், சுங்கை பெசாரில் உள்ள கம்போங் தெபுக் மார்சோ (Kampung Tebuk Marso) அருகே இன்று அதிகாலை இரண்டு பிரம்மாண்ட டிரெய்லர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில், 21 வயதுடைய லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அவரது 7 மாதக் கர்ப்பிணி மனைவி படுகாயமடைந்தார்.

இன்று அதிகாலை 2.49 மணியளவில் இந்த விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவின் துணை இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.

தகவலையடுத்து சுங்கை பெசார் தீயணைப்பு நிலையத்திலிருந்து 6 வீரர்கள் அடங்கிய குழுவினர் மீட்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றார்.

இந்த விபத்துக்குள்ளான 36 டன் இரும்பு ஏற்றி வந்த ஹினோ (Hino) ரக டிரெய்லர் லோரியும், கன்டெய்னர் ஏற்றி வந்த வோல்வோ (Volvo) ரக டிரெய்லர் லோரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

வோல்வோ டிரெய்லரை ஓட்டி வந்த 21 வயது வாலிபர் லோரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். அவரது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த 26 வயதுடைய அவரது 7 மாதக் கர்ப்பிணி மனைவி லேசான காயங்களுடன், தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே பொதுமக்களால் மீட்கப்பட்டார்.

ஹினோ டிரெய்லரை ஓட்டி வந்த மற்றொரு ஓட்டுநர் எவ்விதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

வோல்வோ டிரெய்லரின் ஓட்டுநர் இருக்கையில் மிகக் கொடூரமான முறையில் சிக்கியிருந்த வாலிபரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலை 4.15 மணியளவில் அவர் லோரியின் இடிபாடுகளுக்குள் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டார். எனினும், சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சின் (KKM) மருத்துவப் பணியாளர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். படுகாயமடைந்த அவரது கர்ப்பிணி மனைவி அவசரச் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இக்கோர விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Comments