Offline
Menu
சித்ராவர்ணா 2026: கோலாலம்பூர் ஜாலான் ராஜா சாலை ஜூலை 21 முதல் 27 வரை தற்காலிகமாக மூடப்படுகிறது! மலேசிய சுற்றுலாத்துறை அறிவிப்பு
By Administrator
Published on 07/18/2026 10:00
News

மலேசியாவின் கலை, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய உணவுகளை உலகிற்குப் பறைசாற்றும் ‘சித்ராவர்ணா 2026’ (Citrawarna 2026) பெருவிழாவை முன்னிட்டு, கோலாலம்பூரின் முக்கியச் சாலையான ஜாலான் ராஜா சாலை அடுத்த வாரம் முதல் சுமார் 6 நாட்களுக்கு முழுமையாக மூடப்படவுள்ளதாக மலேசிய சுற்றுலாத்துறை (Tourism Malaysia) இன்று அறிவித்துள்ளது.

‘விசிட் மலேசியா 2026’ (Visit Malaysia 2026) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க மெர்டேக்கா சதுக்கத்தில் (Dataran Merdeka) வரும் ஜூலை 24 முதல் 26 வரை இந்த சித்ராவர்ணா திருவிழா நடைபெறவுள்ளது.

இதற்கான மேடை அமைப்புகள், விழா ஏற்பாடுகள் மற்றும் விழா முடிந்த பின்னர் அவற்றை அகற்றும் பணிகளுக்காக, ஜூலை 21-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஜூலை 27-ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை மெர்டேகா சதுக்கத்தின் முன்பாக உள்ள ஜாலான் ராஜா சாலை முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

சித்ராவர்ணா விழாவின் முக்கிய அங்கமான ‘வண்ணங்களின் பேரணி’ (Colours of Parade) மற்றும் அதன் ஒத்திகையின் போது போக்குவரத்து கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளன.

மேலும், இந்த விழாவின் முக்கிய அங்கமான கலாச்சார ஊர்வலப் பயிற்சிக்காக ஜூலை 24-ஆம் தேதி இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலும், அதிகாரப்பூர்வ ஊர்வலத்திற்காக ஜூலை 25-ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் புலாத்தான் டத்தோ ஓன், ஜாலான் பார்லிமென், ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் ஜாலான் துன் பேராக் உள்ளிட்ட நகரின் முக்கியச் சாலைகளும் மூடப்படவுள்ளன. எனவே, பொதுமக்கள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், விழாவிற்கு வர விரும்புவோர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்விழாவை ஒட்டி, ஜூலை 24 முதல் 26 வரை நாளொன்றுக்கு முதல் 1,000 பயனீட்டாளர்களுக்கு தலா 3 ரிங்கிட் மதிப்பிலான கிராப் பயண வவுச்சர்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments