Offline
Menu
ரொம்பின் சாலையில் கிடந்த மரக்கட்டையில் மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார் – தாயும் மகனும் பலி!
By Administrator
Published on 08/23/2026 18:17
News

குவாந்தான்-செரம்பான் சாலையின் 149.9-வது கிலோமீட்டரில் நேற்று இரவு 9.30 மணியளவில், சாலையில் கிடந்த மரக்கட்டையின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த MPV கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாயும், அவரது 6 வயது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் காரில் பயணித்த கார்ட்டினி ஙாத்தேனான் (Kartinie Ngatenan – 46) மற்றும் அவரது 6 வயது மகன் முஹமட் அக்பர் முகமட் அஸ்மி (Muhamad Akf Mohd Azmi) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த குடும்பத்தினர் செரம்பானில் இருந்து பெல்டா கெராத்தோங் (Felda Keratong) நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. கணவர் காரை ஓட்டிச் சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே கிடந்த மரக்கட்டை மீது கார் மோதியுள்ளது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலதுபுறமாகப் பாய்ந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கிற்குள் தலைகீழாகக் கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கித் தலையில் பலத்த காயமடைந்த தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிச் சென்ற கணவர் தலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக முவாட்சாம் ஷா மருத்துவமனைக்குக் (Hospital Muadzam Shah) கொண்டு செல்லப்பட்டன. படுகாயமடைந்த கணவர் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments