Offline
Menu
10,000 ரோஹிங்கியா அகதிகளைத் துருக்கிக்கு அனுப்ப அமைச்சரவை ஒப்புதல்!
By Administrator
Published on 11/21/2026 12:00
News
துணைப் பிரதமர் ஸாஹிட் அறிவிப்பு!

பெட்டாலிங் ஜெயா, 

மலேசியாவில் தங்கியுள்ள 10,000 ரோஹிங்கியா அகதிகளுக்குத் தொழில்திறன் பயிற்சி வழங்கிய பின்னர், அவர்களைத் துருக்கியில் மறுகுடியேற்றம் செய்வதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனைத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி இன்று அறிவித்துள்ளார்.

மலேசியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் தொடர்பான பிரச்சினைக்கு முறையான, பயனுள்ள மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நீண்டகாலத் தீர்வைக் காணும் நோக்கில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் 10,000 ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ளத் துருக்கி அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அகதிகள் துருக்கிக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் துருக்கியின் பல்வேறு தொழில்துறைகளில் வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான நடைமுறைத் தொழில்திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ஸாஹிட் தெரிவித்தார்.

இதன் மூலம் அகதிகள் புதிய திறன்களைப் பெற்றுக்கொண்டு, துருக்கியில் வேலைவாய்ப்புகளைப் பெற்று தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் தலைவருமான ஸாஹிட், அகதிகள் விவகாரம் நீண்டகாலமாகக் குடியேற்ற நிர்வாகம் மற்றும் தேசியப் பாதுகாப்பில் சவால்களை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

மலேசியாவின் குடிநுழைவுச் சட்டங்களைப் பாதுகாக்கும் அதேவேளையில், மனிதாபிமான அம்சங்களையும் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் விளக்கினார்.

மேலும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகத் துருக்கி அதிகாரிகள், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் மலேசிய அரசாங்கம் இணைந்து பணியாற்றவுள்ளது.

அகதிகளைத் தேர்ந்தெடுத்தல், தொழில்திறன் பயிற்சி வழங்குதல், பயண ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் மறுகுடியேற்ற ஏற்பாடுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்.

இந்த நடவடிக்கைகள் துருக்கியின் தொழில்துறைத் தேவைகள், சம்பந்தப்பட்ட அகதிகளின் சம்மதம் மற்றும் பொருந்தக்கூடிய அனைத்துலக விதிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அகதிகள் மறுகுடியேற்ற விவகாரத்தில் மலேசியா மற்றும் துருக்கி இடையிலான இந்த ஒத்துழைப்பு, மற்ற நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையக்கூடும் என்று ஸாஹிட் தெரிவித்தார்.

Comments